News

கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.

கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து…

முப்தி யூஸுப் ஹனிபா
——————————————————–
வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை.

நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் முக்கியமான கூட்டங்கள், சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றிருந்தோம்.

நாங்கள் பயணத்தைத் திட்டமிட்டிருந்த நேரத்தில் எமது நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் கொவிட் 19 என்கின்ற கொரோனா வைரசின் தாக்கம் பரவலாகக் காணப்படவில்லை. நோயின் தாக்கம் இத்தனை ஆபத்தானதாகக் காணப்படாத ஒரு சந்தர்ப்பத்திலே வைத்தியர்களது ஆலோசனையுடனே இப்பயணமும் ஏற்பாடானது.

இங்கிலாந்திலே திட்டமிட்ட அடிப்படையிலே சகல நிகழ்ச்சிகளையும் இறைவனின் அருளால் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம் அல்ஹம்துலில்லாஹ்! அதனுடைய சகல முடிவுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லவைகளாகவே அமைத்துத் தர அருள்பாலிக்க வேண்டும்.

எமது இங்கிலாந்துப் பயணம் முடியும் தறுவாயில் நிலைமை நெருக்கடியானதாக மாறிவிட்டது. விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் மீண்டும் விமானப்போக்குவரத்து சேவைகள் நடைபெறும் என்ற தகவலும் கிடைத்தது. அவ்வப்போது ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வந்தது.

தொடர்ச்சியாக நாட்டிலே விடுமுறையும் பிரகடனப் படுத்தப்பட்டது. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சுமையும் கவலையும் மனவேதனையை இன்னும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் எங்களைப்போலவே இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று இடையிலே வரமுடியாமல் இருந்தவர்களை அழைத்து வருவதற்கான ஒரு விசேட விமான சேவையின் ஊடாக நாங்கள் தாய் நாட்டை வந்தடைந்தோம்.

வரும்போதே நாட்டு சட்டத்திற்குக் முற்றுமுழுதுமாக கட்டுப்பட்டுச் செயற்படுவது என்கின்ற தீர்மானத்துடனேயே நாங்கள் இருந்தோம்.எமது விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் கண்காணிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

நாங்கள் தற்போது ரன்தம்பே தேசிய மாணவச் சிப்பாயகள் படையணி பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றோம்
அரசாங்கத்தின் தனிமைப்படுத்திக் கண்காணிக்கின்ற பொறிமுறை மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. புதிய தளபாட வசதிகள் டவல், மெத்தை, தலையணை, Washing Machine உள்ளிட்ட WIFI வசதியும் அடங்கலாக அனைத்துமே செய்து தரப்பட்டுள்ளது. மூன்று வேலையும் உணவு வழங்கப்படுவதோடு எங்களுக்கு விருப்பமான veg/non veg தெரிவுகளும் தரப்படுகின்றன.
எமது அரசாங்கம் நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்காக மேற்கொண்டிருக்கின்ற ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் பாராட்ட வேண்டும்.

இந்த நேரத்தில் தனிப்பட்ட விருப்புகளையும் தெரிவுகளையும் விட நாட்டு மக்களின் நலனே முதன்மை பெறுகிறது.அந்த அடிப்படையிலேயே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாம் வீட்டுக்குச் செல்வதை விட ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற வகையில் இந்தக் கண்காணிப்புக்கு முழுமையாக ஒத்துழைக்கின்றோம். இறைவனின் அருளால் நல்ல முறையில் நாம் இருக்கிறோம். அன்பர்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரது விசாரிப்புகளும் பிரார்த்தனைகளும் மேலும் ஊக்குவிப்பைத் தருகின்றன.

இந்த நோயின் தாக்கத்திலிருந்து முழு உலக மக்களும் மீள்வதற்கும் அனைவரின் பாதூப்புக்கும் மன ஆறுதலுக்கும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

எங்கள் எல்லோரது நல்ல எண்ணங்களையும் எல்லாம் வல்ல இறைவன் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான நற்கூலிகளை வழங்குவானாக!

20.03.2020
தேசிய மாணவச் சிப்பாயகள் படையணி பயிற்சி முகாம், ரன்தம்பே

KI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *