சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்?
சம்மாந்துறை நியூஸ் பெஸ்ட் இன் தேடல்
”தெரியாததை தெரிந்து கொள்வோம்”
சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)
சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
*வரலாறு
கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்;கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம்.
டிஒய்லி – (Dioyly) என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார்.
1676 இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான்.
இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம்.
இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம்.
*இப்பதிவு என் தாய் மண் சம்மாந்துறைக்கு சமர்ப்பணம்.
என் தாய்மண் சம்மாந்துறைக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன. என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக அதனை அறிந்துகொள்ள முற்பட்டபோது.. பல சுவாரஸ்யமான வரலாறுகள் அறியக் கிடைத்தன.. அவற்றைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இப்போது எனதூரைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு “சம்மாந்துறை” என்ற பெயர் வந்த காரணத்தைப் பார்க்கலாம்.
கிழக்கிலங்கையில் சீரும் சிறப்பும் வரலாற்றுப் பெருமையுமிக்க பழம் பெரும் பகுதிகளில் சம்மாந்துறை சிறப்பிடம் வகிக்கின்றது.
இங்கு இஸ்லாமியரும் தமிழரும் இரண்டறக்கலந்து இன ஐக்கியத்துக்கோர் எடுத்துக் காட்டாக நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.(முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.)
சம்மாந்துறையானது நெல் வயல்களினால் சூழப்பட்டிருப்பதால்; கிழக்கிலங்கையின் தானியக் களஞ்சியமாக ஊருக்கும், உலகுக்கும் உண்டி கொடுத்து மகிழும் உழவர் பெருமக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்றது. கணிசமான அளவு அரசாங்க ஊழியர்களும், வியாபாரிகளும் ஊரின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர்.
*சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.
சம்மாந்துறை கிழக்கின் பிரதான துறையாகவும், போத்துக்கீசரின் காலத்தில் கண்டி இராச்சியத்தின் பிரதான ஏற்றுமதி இறக்குமதித் துறையாகவும் விளங்கிவந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை சம்மாந்துறை நெல் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதலிடம் வகித்துவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்கு பல கதைகள் சொல்வார்கள்.
”சம்மான்” என்ற ஒரு குழுவினரே இவ்வூருக்கு ஓடத்துறை வழியாக முதலில் வந்திறங்கியதால் சம்மான் வந்திறங்கிய துறை. “சம்மாந்துறை” என்று அழைக்கப்படாலாயிற்று என்பது ஒரு கதை.
வர்த்தகர்கள் ஓடத்துறை வழியாக வந்திறங்கிய போது இப்பிரேதேசத்தின் கரையோரம் செம்மண்ணினால் செண்ணிறமாகக் காணப்பட்டதாகவும். அதனால் இது செம்மண்-துறை என்று அழைக்கப்பட்டதாகவும். பின்னர் சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் சொல்கிறது இன்னுமொரு கதை.
இப்படி பல கதைகள் உலவுகின்ற போதும். பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சரித்திரச் சான்றுகள் உள்ள ஆதாரபூர்வமான விடயம்தான்….
கீழே வருகின்றது.
தென்னிந்திய மக்கள் தோணியை “சம்மான்”என்றே அழைப்பார்கள். இதனால் சம்மான்(தோணி) வந்து தரிக்கும் துறையை சம்மான்-துறை என்று அழைக்கலாயினர். இப்போதும் தோணியின் பெயரைக் கொண்டே இவ்வூரின் பெயர் சம்மாந்துறை என அழைக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில்தான் முஸ்லிம்களின் வருகை இடம்பெற்றிருக்கின்றது.
இறுதியாகச் சொல்லப்பட்ட இதுதான் சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்குரிய வரலாறு என்று எமதூரின் மூத்தவர்களும், ஊரின் சரித்திரம் அறிந்தவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.
கிழக்கிலங்கையின் சொர்க்கபுரியான சம்மாந்துறை பற்றிய அழகான, சுவாரஸ்யமான வரலாறுகள் பல உள. எதிர் வரும் காலங்களில் அவற்றையும் பதிவிட ஆவலாய் உள்ளேன். உங்கள் ஒத்துழைப்போடு