Healthcare

BCG தடுப்பூசி

BCG தடுப்பூசி பிறந்த குழந்தைகளுக்கு போடலாமா???
BCG தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடும் போது குழந்தைகளுக்கு காச நோய்( TB) வருகின்றது. இது உண்மையா???

Bacillus Calmette–Guérin (BCG) Vaccine 

தடுப்பூசியைப் பற்றி நமது சமூகத்தில் பரப்பப்படும் செய்திகளால் தடுக்கப்பட முடியுமான நோய்களால் பெரும் சமூகப் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று பயம் தற்போது எம் மத்தியில் எழுகின்றது.

தடுப்பூசிகள் ஏன் போடுகின்றார்கள்??

கொடூர, பரவக்கூடிய ,குணப்படுத்த முடியாத போன்ற நோய்களை வரும் முன்பே வராமல் தடுப்பதற்காக தடுப் பூசிகள் போடப்படுகின்றது. தடுப் பூசிகளில் உயிருள்ள, வலுவிழகப்பட்டு உயிருள்ள, உயிரற்ற நோய்க்கிருமிகளே பாவிக்கப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்றவாறு தடுப்பூசிக் கிருமியின் வகைகளும் வேறுபடும்.
தடுப் பூசியானது உடம்பினுள் செலுத்தப்பட்டதும் குருதியிலுள்ள நோய் எதிர்ப்பு மையமானது (Immune System) அந்நோய்க் கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உடம்பிலே உருவாக்கி சேமித்து வைக்கின்றன.
பின்பு இந் நோய் தொத்துக்குள்ளாகும் வேளையில் இவ்வகையாக உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியானது நோய் வராமல் தடுக்கின்றது. நோயை விரட்டுகின்றது, ,நோயின் வீரியத்தை குறைக்கின்றது.

தடுப்பூசி போட்டுத் தடுக்கப்படும் நோய்களில் தனி மனிதனைப் பாதிக்கும் நோய்களும் சமூகத்தைப் பாதிக்கும் நோய்களும் காணப்படுகின்றன.

போலியோ, ஏர்ப்பு வலி போன்ற தொத்தாத, தனி மனித நோய்கள்  தடுப்பூசி போட விரும்பாவிட்டு ஏற்பட்டால் அது போடாதவரை மட்டும் பாதிக்கும்.

ஆனால் சமூகத்தில் பரவும் நோய்களாகிய காச நோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போட மறுத்தால் அதாவது சமூகமே மறுத்தால் அது எல்லாரையும் அல்லவா பாதிக்கும். இது சட்ட சிக்கல்களை உருவாக்கும்.

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் நான் இவ்விடத்தில் கூற வேண்டும்.  அதாவது ஒரு சமூகம் தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் ஊசி போடாமல் இருந்து கொண்டு சொல்வார்கள் நாங்கள் ஊசி போடவில்லை.  எங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லையே என்று கூறுவது மட்டுமன்றி உங்களையும் தடுப்பூசி போடாமல் ஆக்குவார்கள்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒன்றும் நடக்காததற்குக் காரணம் என்ன? ?

பெரும் எண்ணிக்கையானவர்கள் தடுப்பூசி போட்டு அந்தச் சமூகத்தில் அந்த நோய்க் கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருப்பதினால் தடுப்பூசி போடாதவர்களும் பாதுகாக்கப்படுகின்றனர். இதை Herd immunity என்பர். அதாவது அந்த சமூகமே ஒற்றுமையாய் தடுப்பூசி போட்டு நோயை விரட்டிய நிலையினால் தடுப்பூசி போடாத சில குழப்பவாதிகளும் அச்சமூகத்தால் பாதுகாக்கப்படுகின்றனர்.

இப்ப சிந்தியுங்கள் தடுப்பூசி போட வேண்டுமா இல்லையா என்று.

நாம் இப்போது காச நோய்(TB) பற்றி எழும் பிரச்சினைகளை பார்ப்போம்.

காச நோய் (Tuberculosis) ஒரு தொற்றும், மனிதனை உருக் குலையச் செய்யும் பக்டீரியாவினால் ஏற்படுத்தப்படும், காற்று, தொடுகை மூலம் பரவக் கூடிய நோயாகும். இந் நோய் தொத்துக்குள்ளான நோயாளிகள் குணமடைந்தாலும் அந்த நோயின் தோற்றமாவது எஞ்சிக் காணப்படும்.

எனவே நாம் கட்டாயம் கவனம் எடுத்து இந்நோயை தடுப்பதோடு சிகிச்சையையும் வழங்க வேண்டும்.

காச நோயின் வகைகளை எடுத்தால்.

1)சுவாசப் பை TB

2)மிலியரி TB

3) TB மூளைக் காய்ச்சல் -TB Meningitis

4)Bone TB

5)குடல் TB
Ect…..

இந் நோய் அதிகமாகக் காணப்படும் நாடுகளில் பிறக்கும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஊசி மூலம் BCG  தடுப் பூசி வழங்கப்படுகின்றது. இதன் மூலம் 20% மான TB வரும் வாய்ப்பு இல்லாமல் போவதோடு, 70% மானவர்களுக்கு TB தொத்துக் குள்ளானாலும் அந்நோய் தீவிரமாகமல் குணமடைகின்றது.
எனவே கிட்டத்தட்ட 90% மேல் பாதுகாப்பு ஏற்படுகின்றது.

இலங்கையில் TB ,தொழு நோய் (Leprosy) அதிகமாகக் காணப்படுவதனால் உலக சுகாதார அமைப்பின் கீழ் தடுப்பூசியானது பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இடது பக்க தோலில் தோலிற்கு கீழாக இத்தடுப்பூசி போடப்படுகின்றது. இதன் மூலம் 15-20வயது வரையும் TB யிலிருந்து பாதுகாப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி  கிடைப்பதோடு மிகவும் முக்கியமாக TB மூளைக் காய்ச்சல் (TB Meningitis)  வராமல் தடுக்கின்றது.

ஆனால் நம்மில் சிலர் TB யை அம்மை நோயுடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்கின்றார்கள். அம்மையும் TB உம் ஒன்றா??? இல்லை.

அம்மைக் காய்ச்சலானது வைரசினால் அதி தீவிரமாகப் பரவும் நோயாகும். இந்த நோய் உடம்பிலே ஏற்பட்டால் அந்த நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையாகவே ஏற்பட்டுவிடும். அம்மை நோய் இரண்டாவது முறை தொத்துவதென்றால் 20 வருடங்களாவது செல்ல வேண்டும். அதாவது நமது வீட்டிலே சகோதரர்களுக்கு அம்மை வரும் போது நமக்கு வராமல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள் காரணம் நமக்கு முன்பு அம்மை வந்திருப்பதேயாகும்.

அம்மை வந்திருந்தால் முற்றாகக் குணமடைவதோடு சமூகத்தில் எந்தவொரு வடுவும் ஏற்படுவதில்லை. ஆனால் உடம்பில் சில தளும்புகள் காணப்படலாம்.

ஆனால் TB அவ்வாறில்லை,
இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி TB நோய் வந்தவுடன் கிடைக்க வேண்டுமென்றால் அதை விடவும் பெரிய முட்டாள்தனம் எதுவாக இருக்கமுடியும். சிறுவர்களை அழிக்கக் கூடியது மட்டுமல்ல 6 மாதத்துக்கு மேல் மாத்திரை பாவிக்க வேண்டிய கொடிய பக்டீரியா நோயே  TB ஆகும்.

அம்மை போல் இயற்கை IMMUNITY யை எதிர்பார்ப்பது, இலவு காத்த கிளியைப் போலாகிவிடும்.

நமது சம்மாந்துறை ஊரிலே கிட்டத்தட்ட 70 000 பேருக்கு மேல் BCG தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் , BCG தடுப்பூசியால் எத்தனை பேருக்கு TB வந்திருக்கின்றது. அதாவது BCG தடுப்பூசியில் காணப்படும் வலுவிழக்கப்பட்ட *மைக்கோ பக்டீரியம் * நோய்க்கிருமிகளினால் நோய் ஏற்பட வேண்டுமாயின் ஊசி போடப்பட்ட பிள்ளையின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே காணப்பட வேண்டும்.இவ்வாறு நடப்பது மிகவும் அரிது.

ஆனால் TB தடுப்பூசி போடாவிட்டிருப்பின் நம்மில் எத்தனை பேருக்கு TB வந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பிறக்கும் குழந்தைகளுக்கு BCG போடுவதால் ஆகக் குறைந்தது 15-20 வயது வரையாவது TB யிலிருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும் பாதுகாக்கலாம்.

நமக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும் போதும் நாம் TB நோய்க்கிருமிகளை எதிர்கொள்ளும் போதும் நமக்கு TB வரும் வாய்ப்பும் உள்ளது. அதனால்தான் கவனமாக கையாள வேண்டும்.

TB தடுப்பூசி போடும் போது பிரதானமாக ஏற்படும் பக்க விளைவுகளாவன..

ஊசி போடும் இடத்தில் வலி,காயம் வீக்கம். தலும்பு.

மிகவும் அரிதாகவ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு TB உம் வரலாம்.

*உங்களுக்கு இன்னுமொரு சந்தேகம் வரலாம் *

நமதூரிலே TB ஆனது அதிகமாகக் காணப்படுவதால் இயற்கையாகவே TB யை தடுக்க முடியாதா???

நான் முன்பு குறிப்பிட்ட Herd immunity இனால் சமூகத்தில் தடுப்பூசி போடாத சிலர் பாதுகாக்கப்படலாம்.

UK இல் உள்ள குழந்தைகளின் குருதியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்படுவதால் BCG தடுப்பூசி மூலமே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.

ஆனால்

மலாவி என்ற நாட்டிலே TB யைக் கட்டுப்படுத்துவதில் BCG தடுப்பூசியானது வேலை செய்வதில்லையாம்.காரணம் அங்கு TB நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களின் உடம்பில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதனாலாகும்,  எனவே BCG தடுப்பூசியை வழங்கும் போது அது வேலை செய்யாது. காரணம் என்னவென்றால் ஏற்கனவே Immunity உருவாக்கப்பட்டு விட்டது.
மலாவி மக்களுக்கு கிடைக்கப் பெற்ற இயற்கை TB நோய் எதிர்ப்பு சக்தியினால் சுவாசப்பை TB யே பெரும்பாலும் கட்டுப் படுத்தப்படுவதோடு ஏனைய TB வகைக் கட்டுப்பாடு மிகவும் கடிமாகக் காணப்படுவது பெரும் சவாலாகும்.மேலும் மலாவியில் BCG தடுப்பூசிக்கு தொழு நோயே (Leprosy)பெரும் பாலும் கட்டுப்படுத்தப் படுகின்றதாம்.

BCG தடுப்பூசியின் மேலதிக நன்மைகள்

1) TB Meningitis யைக் கட்டுப்படுத்தும்.

2) தொழு நோய்(Leprosy) க்கான தடுப்பு மருந்தாக தொழிற்படல்

3) சுவாசப்பை க்கு வெளியே ஏற்படும் TB க்கான கட்டுப்பாடு

4) ஒரு வகை குடல் புண்ணைத் தடுக்கும்

5) சிறு நீர் பை  புற்று நோயைத் தடுக்கும்.

உலக சுகாதார அமைப்பானது (WHO)  நமது நாட்டில் BCG தடுப்பூசியை வழங்குமாறு வேண்டியுள்ளது.
எனவே பாருங்க,  நமக்கு போடப்பட்டுள்ள BCG தடுப்பூசியானது 15-20 வயது வரைதான் என்று ஆய்வுகள் சொன்னாலும் நமது உடம்பானது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி இன்னும் நம்மை பாதுகாக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

எனக்கு ,எனது உடன் பிறப்புகள், நெருங்கிய சொந்தங்கள், சொந்தங்கள், நமது பிரதேச மக்கள் யாவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டும் இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்றால் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக உள்ளது எனலாம்.

மேலும் HPV வைரசும் கருப்பைக் கழுத்துப் புற்று நோயும் என்ற விடயத்திலும் திசை திருப்புவர்களைக் கண்டு ஏமாதீர்கள். தடுப் பூசியைப் போடுங்கள்

நமது இலங்கை நாடானது பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடையாமல் இருக்கலாம், ,ஆனால் கல்வி சுகாதாரத்தில் நாம ரொம்ப மேலே உள்ளோம். எனவே நமது நாட்டில யாரும் பரிசோதணைக்காக எந்த தடுப்பூசியையும் கொண்டு வரமுடியாது, போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்

சாராம்சம்.
நமது சமூகத்தை பாதுகாக்க பெறுமதியான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் போது நமது சுகாதாரத்தை மேம்படுத்த ஆதரிப்போம். நாம் யாவரும் BCG தடுப்பூசியை நமது பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கி அதன் நன்மைகளை அடைவோம் இன்ஷாஅல்லாஹ்

சாதாரணமாக விளங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  உங்களுக்குப் பிடித்திருந்தால் துஆச் செய்யுங்கள்.


Dr .IL.M. Rizwan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *