Healthcare

மனித பப்பிலோமா (HPV) வைரஸ் தடுப்பூசி

மனித பப்பிலோமா (HPV) வைரஸ் தடுப்பூசி….
பெற்றோருக்கான தகவல் குறிப்பு…..

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின்கீழ் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் வருமுன் காப்பதற்கான மனிதப் பப்பிலோம்னா வைரஸ் (HPV) தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை கழுத்துப்புற்றுநோய் 2ஆவது இடத்தில் உள்ளது.இலங்கையில் வருடாந்தம் 850 – 950 பெண்கள் கருப்பை கழுத்துப்புற்றுநோய் முற்றிய நிலையில் இனங்காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதுடன் மிகக்குறுகிய காலத்தினுள் இறந்துவிடுகின்றனர்.

பெரும்பாலான கருப்பை களுத்துப் புற்றுநோய்கள் HPV வைரஸ் தொற்றினால் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வைரஸ் ஆனது சாதாரணமாக ஆரம்பத்தில் எவ்வித வெளி அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் பெண் ஒருவரின் கருப்பை கழுத்திலுள்ள கலங்களினுள் புகுந்து அக்கலங்களின் இயல்புகளை மாற்றி நீண்டகாலப்போக்கில் அக்கலங்களைப் புற்றுநோய்க் கலங்களாக மாற்றிவிடுகறது. அப்பெண்ணுக்கு வயதாகும்போது புற்றுநோய்க்கலங்கள் பெருக்கமடைந்து இறுதியில் கருப்பை களுத்துப்புற்று நோய் ஏற்படும். கருப்பை கழுத்து யோனிவழி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் கல மாதிரிகளில் பரிசோதனையை நடத்துவதன் மூலம் இவ்வைரஸ் தொற்று இனங்காணப்படலாம். இது ஏற்கனவே உருவாகியுள்ள கருப்பை களுத்துப்புற்று நோயை அதன் ஆரம்ப நிலைகளிலே இனங்கண்டு சிகிச்சையளிப்பதற்காக மட்டுமே பயன்படும் “ஸ்கிரீனிங்” பரிசோதனையாகும். இதன் மூலம் ஏற்கனவே உருவாகியுள்ள புற்றுநோய் மேலும் பரவுவதையும் முற்றிய நிலைக்குச் செல்வதையும் தவிர்க்க முடியும். ஆனால் மனித பப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியினை வைரஸ் தொற்று ஏற்பட முன்னர் வழங்குவதன் மூலம் மட்டுமே இப்புற்றுநோய் உருவாக முன்னர் தடுக்க முடியும். எனவே பெண்களுக்கு இத்தடுப்பூசியினை மிக இளம் வயதில் அதாவது வைரஸ் தொற்று ஏற்பட முன்னர் வழங்குவது அவசியமாகும்.

HPV என்பது நூறுக்கும் மேற்பட்ட வைரஸ் உபவைகளே கருப்பை களுத்துப்புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.99%ஆன கருப்பை கழுத்துப்புற்றுநோய்கள் HPV வைரஸ் தொற்றினால் ஏற்படுத்தப்படுகின்றன. அதேவேளை அவற்றில் 70% ஆனவை வகை 16, வகை 18 என்பவற்றினால் ஏற்படுகின்றன. HPV தடுப்பூசியானது கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை ஏற்படுத்தும் பிரதான வகைகளான 16,18 என்பவை தொற்றுவதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பெண்களில் ஏற்படும் கருப்பை கழுத்துப் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV வைரஸின் ஏனைய உபவைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி பாடசாலைப்பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டாலும் பெண்கள் வயதாகும்போது கருப்பைக்கழுத்துப் புற்றுநோய்க்கான “ஸ்கிரீனிங்” பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் பாடசாலைப் பெண்பிள்ளைகளுக்கான HPV தடுப்பூசி வழங்கும் திட்டமானது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது

இலங்கையின் தேசிய தடுப்புமருந்தேற்றல் திட்டத்தினுள் 2017 ஆம் ஆண்டு முதல் கருப்பைக்கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி உள்வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏறபடும் கருப்பை கழுத்துப் புற்றுநோயை தடுப்பதற்காக பெண்பிள்ளைகளுக்கு இத்தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்தடுப்பூசி பாதுகாப்பானதுடன் 2006ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டு பாவனையிலுள்ளது. இலங்கையில் இத்தடுப்பூசி 2012 இல் பதிவு செய்யப்பட்டு தனியார் மருத்துவ மனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. எனினும் 2017 ஆம் ஆண்டிலிருநது அனைத்து பெண் சிறார்களுக்கும் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

10 வயது பூர்தியடைந்த தரம் 06 இலுள்ள எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் இத்தடுப்பூசி 2 தடவைகள் 6 மாத இடைவெளியில் வழங்கப்பட வோண்டும். இதனைப் பாடசாலையில் ஏதாவது காரணங்களால் பெறத்தவறும் பட்சத்தில் குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கிளினிக்கில் (MOH clinic) பெற்றுக்கொள்ளலாம்.

இத்தடுப்பூசி பாடசாலையில் வழமையாக வழங்கப்படும் ஈர்ப்புவலி ரொக்சைட் (aTd) தடுப்பூசி வழங்கப்படும் அதே நாளில் சேர்த்து வழங்கப்படக்கூடியது. முதலில் தரம் 6 இலும் பின்னர் பின்னர் 6 மாத இடைவெளியில் தரம் 6 அல்லது தரம் 7 இலும் வழங்கப்படும்.

HPV தடுபூசி பாதுகாப்பானது ஊசி ஏற்றப்படும் இடத்தில் வலி, தோலில் மெல்லிய சிவப்புத்தன்மை போன்ற மிகச்சிறிய பாரதூரமற்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். பாரதூரமான பக்கவிளைவுக்கான வாய்ப்பு மிக மிக அரிதாக இருப்பதுடன் வேறு நாடுகளில் இதுவரை அவ்வாறான தீய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் பெண்பிள்ளை கற்கும் பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரைப் பிள்ளையின் பாடசாலைக்கு வருகை தந்து உங்கள் பிள்ளைக்கு HPV தடுப்பூசியினை இரண்டு தடவைகளும் ஏற்றுமாறு வேண்டுவதன் மூலம் மனித பப்பிலோமா வைரசினால் ஏற்படும் கருப்பை களுத்துப் புற்றுநோயிலிருந்து உங்களது பெண்பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்..

MOH/Sammanthurai
Dr. M.M.M. Shabeer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *